ஊத்துக்கோட்டை:தமிழக- - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இரு மாநில எல்லையில் உள்ளதால், ஆந்திர மாநிலம், தாசுகுப்பம், புதுக்குப்பம், சுருட்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர்.
ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் நெல், வேர்க்கடலை,ஒ கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
சுற்றியுள்ள கிராமங்களில் நெல் பயிரிட, களை எடுத்தல், அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு கிராமங்களில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைத்து செல்வது வழக்கம்.
சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் கட்டட வேலைக்கும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்து செல்கின்றனர்.
வேலைக்கு அழைத்து செல்பவர்கள், 30க்கும் மேற்பட்டவர்களை அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செல்லாமல், குட்டியானை போன்ற லோடு வாகனங்களில் செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று, ஊத்துக்கோட்டையில் இருந்து கட்டட பணிக்கு அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்ல, லோடு வண்டியில் ஆட்களை ஏற்றிச் சென்றனர்.
கட்டட பணிக்கு கலவை கலக்கும் இயந்திரத்தையும் லோடு லாரியில் இணைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊத்துக்கோட்டை பகுதியில் அன்றாடம் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. அரசு துறைகளைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அடுத்த சில தினங்கள் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
பின் மெத்தனமாக இருந்து விடுகின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.