திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில், விவசாயிகள் நெல், வேர்க்கடலை போன்ற தானியங்கள் சேமித்து வைக்கவும், விற்பனை செய்வதற்கும் வேளாண் சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது.
இங்கு, விவசாயிகள் அதிகளவில் நெல் மூட்டைகள் இருப்புகள் வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சேமிப்பு கிடங்கு உரிய முறையில் பராமரிப்பு இல்லாததால் கிடங்கின் இணைப்பு படிகள் சேதம் அடைந்துள்ளன.
இந்த படிகள் வழியாக தான் விவசாயிகள் தங்களது நெல் மற்றும் தானிய மூட்டைகளை சேமிப்பு கிடங்கின் உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.
படிகள் உடைந்துள்ளதால் விவசாயிகள் அச்சத்துடன் மூட்டைகளை முதுகில் துாக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஒன்றரை மாதம் வரை இந்த சேமிப்பு கிடங்கில் விவசாயிகள் நெல் மூட்டைகளை இருப்பு வைத்தும், விற்பனை செய்தும் வந்தனர். தற்போது அறுவடை இல்லாததால் விவசாயிகள் நெல் மூட்டைகள் கொண்டு வரவில்லை.
அடுத்த மாதம் முதல், நெல் அறுவடை துவங்கும் என்பதால், அதற்குள் சேமிப்பு கிடங்கின் சேதம் அடைந்த படிகளை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு சேமிப்பு கிடங்கின்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.