திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் அடுத்த, காஞ்சிப்பாடி, கூளூர் கிராமத்தில் ஒவ்வொரு பருவத்திலும், 600 ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி, உலர்த்தியும், கோணிப்பையில் அடைத்தும், டிராக்டரில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.
இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள பல நகரங்களுக்கு சென்று வருகின்றன.
இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
எனவே, சாலையை விவசாயிகள் நெற்களமாக பயன்படுத்துவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.