திருவள்ளூர்:அரசு பள்ளி மாணவ - மாணவியரின் கல்வித் தரத்தை ஊக்குவிக்கும் வகையில், திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், 'காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
மாதம் ஒரு ஒன்றியத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பில் சிறப்பாக படிக்கும் மாணவ - மாணவியரை சந்தித்து, அவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடி வருகிறார்.
இந்த வரிசையில், நேற்று, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவில் நடைபெற்ற கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ - மாணவியர், 23 பேருடன், கலெக்டர் கலந்துரையாடினார்.
பின், மாணவ - மாணவியருக்கு கலெக்டர் பல்வேறு ஆலோசனை வழங்கியும், அவர்களின் கலைத் திறனையும் கேட்டறிந்து பாராட்டினார்.
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன், பள்ளி துணை ஆய்வாளர் பிரேம்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி உட்பட பலர் பங்கேற்றனர்.