அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: கடலில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் என்ற பெயரில் பேனா சிலை வைப்பது தொடர்பாக, அ.தி.மு.க., சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும். பொது மக்கள் கருத்து தான் எங்கள் கருத்து. இதனால் பயன் உள்ளதா, இல்லையா என்பதை ஆய்வு செய்து விளக்கம் அளிக்கப்படும்.
டவுட் தனபாலு: எப்ப விளக்கம் தருவீங்க... கடலின் நடுவில் பேனா சிலையை வைத்த பிறகா...? நீங்க பதில் சொல்லாம நைசாக நழுவுவதில் இருந்தே, ஆளுங்கட்சியுடன் உங்களுக்கு, 'அண்டர் ஸ்டேண்டிங்' இருப்பது, 'டவுட்'டே இல்லாம அப்பட்டமா தெரியுதே!
lll
பள்ளிக்கல்வி துறை செயலர் காகர்லா உஷா அரசாணை: தேர்வு முடிவுகளை வெளியிடும் முன், எந்த தனியார் பள்ளியிலும், மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களை தேர்வு எழுதுவதில் இருந்து தடுக்க கூடாது. போதிய வருகைப்பதிவு இல்லாத மாணவர்களை, தேர்வு எழுத அனுமதிக்க கூடாது. எந்தவித சிறப்பு பயிற்சி வகுப்பிலும் சேருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.
டவுட் தனபாலு: மேற்கண்ட எல்லா, 'கூடாது'களையும், தனியார் பள்ளிகள் செவ்வனே செஞ்சிட்டு தான் இருக்கின்றன... எழுதுவதற்கு முன் பிள்ளையார் சுழி போடுவது போல, வருஷ ஆரம்பத்துல இப்படி அரசாணை போடுறதையும் சம்பிரதாயம் ஆக்கிட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll
முதல்வர் ஸ்டாலின்: வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; சொத்து ஆவணங்களை கணினிமயமாக்கி மேம்படுத்த வேண்டும். வக்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, வருவாயை அதிகரிக்க வேண்டும். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, வாரிய செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க வேண்டும்.
டவுட் தனபாலு: வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை... அதேபோல, ஹிந்து அறநிலையத் துறை சொத்துக்களை பாதுகாப்பதிலும், அதன் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மையை கொண்டு வரவும் முதல்வர் பாடுபட்டால், 'டவுட்'டே இல்லாம அவரை பாராட்டலாம்!
lll