திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் ஊராட்சியில், 2009- - 10ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், நுாலக கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
நுாலகத்தில், 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளன. இதுதவிர, தினசரி நாளிதழ்கள், வார இதழ்களும் நுாலகத்தில் வரவழைக்கப்பட்டிருந்தன.
இளைஞர்கள் மற்றும் வாசகர்கள் அதிகளவில் நுாலகத்திற்கு வந்து படித்து வந்தனர்.
இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம், சில ஆண்டுகளாக நுாலகத்தை திறந்து வாசகர்கள் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் நுாலகத்தில் புத்தகங்கள் மற்றும் கட்டடம் வீணாவதுடன் பல இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதுதவிர, வாசகர்கள், இளைஞர்கள் இடையே வாசிப்பு திறனும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, மாவட்ட கலெக்டர், பூட்டியே கிடக்கும் ஊராட்சி நுாலகங்களை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.