Saturn transit works! | சனிப் பெயர்ச்சி வேலை செய்கிறது! | Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

சனிப் பெயர்ச்சி வேலை செய்கிறது!

Added : பிப் 02, 2023 | |
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீது, யாராவது கை வைத்தால், அவர்களின் கையை வெட்டுவேன்' என்று, தி.மு.க., பொருளாளர், டி.ஆர். பாலு பேசியுள்ளார். கட்சியில் உள்ள மூத்த தலைவர்களே இப்படி பேசினால், தி.மு.க.,வில் உள்ள மற்றவர்களை பற்றி சொல்லத் தேவையில்லை.பாலு போன்றவர்கள், தங்களின் பேச்சு வாயிலாக,


வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீது, யாராவது கை வைத்தால், அவர்களின் கையை வெட்டுவேன்' என்று, தி.மு.க., பொருளாளர், டி.ஆர். பாலு பேசியுள்ளார். கட்சியில் உள்ள மூத்த தலைவர்களே இப்படி பேசினால், தி.மு.க.,வில் உள்ள மற்றவர்களை பற்றி சொல்லத் தேவையில்லை.

பாலு போன்றவர்கள், தங்களின் பேச்சு வாயிலாக, வன்முறைக்கு பெயர் பெற்ற கட்சி, தி.மு.க., என, உறுதிப்படுத்துகின்றனர். திராவிட மாடல் எத்தனை பயங்கரமானது என்பதையும், நமக்கு புரிய வைக்கின்றனர்.

இந்த மகானுபாவர், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், மத்திய அமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலையில் இருந்த கோவில்களை இடித்து தரைமட்டமாக்கினாராம்; ஆனாலும், எந்தத் தெய்வமும் இவரை ஒன்றும் செய்யவில்லையாம்.

இவர் ஒரு உண்மையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்... மனிதர்களைப் போல, தெய்வம் அவ்வளவு எளிதில் யாரையும் பழி வாங்கி விடாது; தெய்வம் நின்று தான் கொல்லும்.

டி.ஆர்.பாலு அவர்களே... இறைவனையோ, அவனின் பக்தர்களையோ, மனம் புண்படும்படி பேசியிருந்தால், அதற்கான கூலியை நிச்சயம் ஒரு நாள் பெறுவீர்கள். நீங்கள் இன்று செய்யும் தவறுகள், நாளை உங்கள் வாரிசுகளை பாதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ராமாயணம் கட்டுக்கதையாகவே இருக்கட்டும்; அதிலுள்ள தத்துவங்கள் பூஞ்சை கண்களுக்கு புலப்படாது. கடந்த அரை நுாற்றாண்டாக, மக்களின் ஓட்டுகளை பெற, தி.மு.க., அள்ளிவிட்ட கட்டுக் கதைகளை போல, வேறு புராண கட்டுக் கதைகள் இருக்க முடியுமா?

சமீப நாட்களாக, தி.மு.க., மூத்த தலைவர்களின் நாக்கில், சனி பகவான் குடியேறியுள்ளார். அதனால் தான், தாறுமாறாகப் பேசுகின்றனர். மொத்தத்தில் சனிப் பெயர்ச்சி, தி.மு.க.,விற்கு நன்றாகவே வேலை செய்கிறது.

'தி.மு.க., ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அடுத்த முறை ஆட்சிக்கு வராது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி சொன்னதை, டி.ஆர்.பாலு போன்றவர்களின் பேச்சுகள் நிச்சயம் உறுதி செய்து விடும்.

lll



ராகுல் பெருமைப்பட மோடியே காரணம்!



மு.கந்தசாமி, நெல்லையில்இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் நடத்திய ஒற்றுமை யாத்திரை, ஒரு வழியாக, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் முடிவுக்கு வந்துள்ளது.

நிகழ்ச்சியின் நிறைவாக, ஸ்ரீநகரின் லால்சவுக் பகுதியில், நம்நாட்டின் தேசியக்கொடியை ஏற்றியுள்ளார் ராகுல். இதற்காக, அவரும், மற்ற காங்கிரசாரும் பெருமை பீற்றத் துவங்கிஉள்ளனர்.

உண்மையில் இதற்காக பெருமைப்பட வேண்டியவர்கள், பா.ஜ., கட்சினர்; வெட்கப்பட வேண்டியவர்கள் காங்கிரசார்.

நாடு விடுதலை அடைந்த பின், ௫௦ ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ் தான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. அந்த அரசின் கட்டுப்பாட்டில் தான் முப்படைகளும் இருந்தன.இருப்பினும், ஸ்ரீநகரின் லால்சவுக்கில், நம் நாட்டு தேசியக் கொடியை, காங்கிரசாரால் பறக்க விட முடியவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில், தேசியக்கொடி ஏற்ற பொதுமக்கள் அனுமதி கேட்டும்,பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை காரணம் காட்டி, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் மறுத்து வந்தது.

கடந்த ௧௯௯௨ல் மட்டுமே, பா.ஜ., மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, ஸ்ரீநகரின் லால்சவுக் பகுதியில் உள்ள மணிக்கூண்டில் தேசியக்கொடி ஏற்றினார்; அதன்பின், ௩௦ ஆண்டுகளாக அங்கு கொடிஏற்றப்படவில்லை.

அப்படி, ஜம்மு- - காஷ்மீர் பகுதியில், தேசியக் கொடியை ஏற்ற முடியாமல்இருந்ததற்கான காரணம், அந்த மாநிலத்திற்கென அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து தான்.

அந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு - காஷ்மீரை, நாட்டின் மற்ற மாநிலங்களோடு ஒன்றிணைய வைத்த பெருமை, பிரதமர்மோடி தலைமையிலான, பா.ஜ., அரசையே சாரும். இந்த விஷயத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்களிப்பும் முக்கியமானது.

இதனால் தான், சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.

ஸ்ரீநகரில் உள்ள பிரபலமான லால்சவுக் பகுதியில் உள்ள மணிக்கூண்டு டவரில், 30 ஆண்டுகளுக்கு பின் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது, பொதுமக்கள் மிகுந்த ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

அதாவது, காங்., ஆட்சியில் மூவர்ண கொடி ஏற்றப்படாமல் இருந்த நிலைமை, பா.ஜ., ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு, ராகுலும், காங்கிரசும் நன்றி நவில வேண்டும். லால்சவுக் வளாகத்தில்தேசியக் கொடி ஏற்றி, ராகுல் பெருமைப்பட்டதற்கு காரணமும், மோடி அரசு தான். அதேநேரத்தில், தங்கள் ஆட்சியில் கொடியேற்ற முடியாத நிலைமை இருந்ததற்காக, காங்கிரசார் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

lll


'சீட்'டுக்காக விலை போகாதீங்க கமல்!



மு.ராம்குமார், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டிலேயே தமிழகத்தில் தான், மிக அதிகமாக, 'லெட்டர் பேடு' கட்சிகள் இருப்பதாக, சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கமல்ஹாசன் துவக்கிய, மக்கள் நீதி மய்யம் கட்சி, ௨௦௨௧ சட்டசபை தேர்தலில் பெற்ற ஓட்டுகள் மிகவும் குறைவு. ஒரு தொகுதியில் கூட, அக்கட்சியினரால் வெற்றி பெற முடியவில்லை; உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியையே அவரின் கட்சி சந்தித்தது.

அப்படிப்பட்ட நிலையில், காங்கிரசுக்கு ஆதரவுஎன்ற புறவழியாக, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற முற்பட்டுள்ளார், கமல். இதற்காகவே, காங்., - எம்.பி., ராகுலின் ஒற்றுமை யாத்திரை, டில்லியில் நடைபெற்ற போது, அதில் பங்கேற்றார் கமல்.

அடுத்ததாக, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்., வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில், கமல் செய்யும் பிரசாரம், விளம்பரத்துக்கு தான் உதவுமே தவிர, ஓட்டுக்கு என்றுமே உதவாது. கடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், கமல் கட்சியிலிருந்து ஏராளமானோர் விலகி விட்டனர்.

தற்போதைய நிலையில், நாட்டில் பல சங்கங்கள் இருப்பதை போல, மக்கள் நீதி மய்யமும் ஒரு சங்கமாகவே செயல்பட்டு வருகிறது.

கமலை நம்பி, அவரின் ரசிகர்கள் கூட ஓட்டு போடவில்லை என்பது, ௨௦௨௧ தேர்தலில் உறுதியாக தெரிந்தது. சினிமாவில் சிறந்த நடிகரான கமலை, அரசியலில் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியை கலைத்து விட்டு, சினிமாவில் முழு நேரமும், கமல் கவனம் செலுத்தலாம். அதற்கு மாறாக, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து, ஒன்றிரண்டு, 'சீட்'களுக்காக விலை போனால், சினிமா வாயிலாக கிடைத்த பேரும், புகழும், மண்ணோடு மண்ணாகி விடும்.

lll


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X