திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
இக்கரும்பை வெட்டி திருவாலங்காடு பகுதியில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர்.
தமிழகத்தில் கரும்பு வெட்டுவதற்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, தற்போது கரும்புகள் வெட்டுவதற்கு விவசாயிகள், ஆந்திர மாநிலத்தில் இருந்து, தொழிலாளர்களை அழைத்து வந்து கரும்புகள் வெட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர்.
இது குறித்து நெமிலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.சி. ஹேமாத்திரி கூறியதாவது:
பத்து ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு பயிரிட்டு வருகின்றனர். தற்போது, 12 ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் அனுப்புவதற்கும் அனுமதி கடிதம் பெற்றுள்ளேன்.
ஆனால், கரும்பு வெட்டுவதற்கு இங்கு ஆட்கள் கிடைக்காததால் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குண்டக்கல் பகுதியில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளேன். 1,000 கிலோ கரும்புக்கு, 900- - 1,000 ரூபாய் வரை கூலியாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, ஆந்திர மாநில தொழிலாளர்கள், சந்திரநாயக், சங்கர்நாயக் மற்றும் கோபிநாயக் ஆகியோர் கூறியதாவது:
இரு ஆண்டுகளாக கரும்புகள் வெட்டுவதற்கு எங்கள் தலைமையில், 28 குடும்பத்தினர் திருத்தணி தாலுகாவிற்கு வந்து வயல்வெளியில் தற்காலிக குடிசைகள் அமைத்து குடும்பத்துடன் தங்கி, கரும்புகள் வெட்டி வருகிறோம்.
எங்களது குழந்தைகளை படிப்பதற்கு உறவினர் வீடுகள் அல்லது விடுதிகளில் தங்க வைத்து, குடும்பத்துடன் வந்து குறைந்தபட்சம் ஐந்து மாதங்கள் தங்கியிருந்து கரும்புகள் வெட்டிவிட்டு எங்களது வீடுகளுக்கு திரும்புகிறோம்.
ஆந்திர மாநிலத்தில் இயங்கி வந்த அனைத்து தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் சில அரசு ஆலைகள், ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
ஆகையால், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்து கரும்பு வெட்டுவது, வேர்க்கடலை, நெல் பயிரிடும் பணிகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் சீரமைத்தல் பணிகள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.