''நிஜ முகத்தை காட்டிட்டாங்களேன்னு வருத்தப்படுறாங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''யார் மேல யாருவே வருத்தப்படுதா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில, சசிகலா குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான, பெண்கள் கல்லுாரியின் நிறுவனர் தின விழா சமீபத்துல நடந்துச்சு... இதுல, கல்லுாரி நிறுவனர் படமும், சிறப்பு விருந்தினரா பங்கேற்ற சசிகலாவின் படத்தையும் தான், மேடையில பேனரா வச்சிருந்தாங்க பா...
''அ.தி.மு.க.,வாலயும், ஜெயலலிதாவாலயும் தான் சசிகலா குடும்பத்தினர் ஊர், உலகத்துக்கே தெரிஞ்சாங்க... பல தலைமுறைகளுக்கு சொத்துக்களையும் வாங்கி குவிச்சாங்க பா...
''ஆனா, அந்த பேனர்ல எங்கயும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களே இல்லை... 'இதெல்லாம், சசிகலாகுடும்பத்தின் நிஜ முகத்தை காட்டிடுச்சு'ன்னு அந்தக் காலத்து தொண்டர்கள் வேதனைப்படுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதிகாரிகள் தகவல்ஒண்ணு இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவிடம், ''சீக்கிரம் சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''வார இறுதி நாட்கள்ல, விவசாயிகளை அவா இடத்துக்கே தேடிப் போய் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் சந்திக்கணும்... அப்ப, வேளாண் சாகுபடியை அதிகரிக்க ஆலோசனைகள் தரணும் ஓய்...
''ஆனா, இப்ப கொஞ்ச நாளா விவசாயிகளை யாரும் தேடி போய் பார்க்கறதே இல்லை... சென்னையில இருந்து வேளாண்மை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடத்தற, 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டங்கள்ல பங்கேற்கவே, அதிக நேரத்தை மாவட்ட அதிகாரிகள் செலவிடறா ஓய்...
''அதே மாதிரி, மத்திய வேளாண் துறை சார்புலயும், அடிக்கடி வீடியோ கான்பரன்ஸ் கூட்டங்களை நடத்தறா... அதுலயும் மாவட்ட அதிகாரிகள் கலந்துக்கறா ஓய்...
''இதனால, வேளாண் துறை ஆபீசுக்கு வர்ற விவசாயிகளையும் அதிகாரிகள் சந்திக்கறது இல்லை... 'நம்மையும் தேடி வர மாட்டேங்கறா... நாம வந்தாலும், பார்க்க முடியறது இல்லையே'ன்னு விவசாயிகள் தரப்பு புலம்பறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அமைச்சர்களுக்கும், கலெக்டருக்குமே 'அல்வா' குடுத்துட்டாங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''மதுரை மாவட்டத்துல, சமீபத்துல, 202 தலையாரிகளை நியமிச்சாங்க... அமைச்சர்கள், ஆளுங்கட்சி புள்ளிகள் சிபாரிசுகள் நிறைய வரவே, 'டென்ஷன்' ஆன கலெக்டர், கீழ்மட்ட அதிகாரிகளை கூப்பிட்டு, 'நேர்மையான முறையில நியமனங்களை பண்ணுங்க... யார் சிபாரிசுக்கும் இடம் தராதீங்க'ன்னு கண்டிப்பா சொல்லிட்டாருங்க...
''இதன்படி, பல தாலுகாக்கள்ல அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிபாரிசுகளை, அதிகாரிகள் அடியோட புறக்கணிச்சிட்டாங்க... அதே நேரம், இதையே சாக்கா பயன்படுத்தி, சில அதிகாரிகள், தங்களுக்கு வேண்டியவங்களின் பிள்ளைகள், சொந்தக்காரங்களை, தலையாரிகள் பட்டியல்ல புகுத்திட்டாங்க...
''இதைக் கேள்விப்பட்ட ஆளுங்கட்சி ஒன்றிய செயலர்கள், 'தலையாரி வேலை கூட வாங்கி தர முடியலைன்னா, தொண்டர்கள் எப்படி எங்களை மதிப்பாங்க'ன்னு அமைச்சர்களிடம் புலம்பிட்டு இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கலைந்தனர்.