பொன்னேரி:பொன்னேரி அடுத்த, கள்ளூர் கிராமம், பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியை ஒட்டியுள்ள கிராமம் என்பதால், இங்கு நிலத்தடி நீரும் உவர்ப்பாகவே இருக்கும்.
ஆண்டுக்கு ஒரு முறை மழையை நம்பி கிராம மக்கள் விவசாயம் செய்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெய்த மழை நீரை கொண்டு, 600 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டது.
மழைக்கு பின், விவசாயிகள் நீர்நிலைகளில் தேங்கிய மழை நீரை பயன்படுத்தி, நெற்பயிர்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
நெற்கதிர்கள் நன்கு வளர்ந்து, அடுத்த சில தினங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், அருகில் உள்ள வெப்பத்துார் கிராமத்தில் இருந்து, 100க்கும் அதிகமான கால்நடைகள் தினமும் கூட்டம் கூட்டமாக வந்து நெற்பயிர்களை கடித்து, சேதப்படுத்தி வருகின்றன.
கால்நடைகளிடம் இருந்து, நெற்பயிர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, காவல், வருவாய், வேளாண்மைத் துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது.
ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் விவசாய வருவாயைக் கொண்டு ஆண்டு முழுதும் வாழ்வாதாரம் காக்க வேண்டிய நிலையில் கால்நடைகளால் இந்த ஆண்டு வருவாய் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.