சோழவரம்:கும்மிடிப்பூண்டி அடுத்த, மெதிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மகன் மனோஜ்குமார், 13. தலையாரிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
போதைக்கு அடிமையாகி, பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். அதையடுத்து, சிறுவனின் தாய் அகிலா, கடந்த மாதம், 21ம் தேதி, சோழவரம் அடுத்த, அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் 'குடி' போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி நள்ளிரவு, சிறுவன் மனோஜ்குமார் மர்மமான முறையில் இறந்தார். உடலில் ரத்த காயங்கள் இருப்பதால், மகன் சாவில் மர்மம் இருப்பதாக சோழவரம் காவல் நிலையத்தில், மனோஜ்குமாரின் தாய் புகார் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்படி, செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன் வழிகாட்டுதலின்படி சோழவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மேற்கண்ட மறுவாழ்வு மையத்தில் உள்ள நிர்வாகிகள் தாக்கியதில் இறந்தது தெரிந்தது. அதைத் தொடர்ந்து, சிறுவனின் மரணம், கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
வழக்கில் தொடர்புடைய, மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் விஜயகுமார், 39, அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் ஜீவிதன், 30, டில்லிபாபு, 26, யுவராஜ், 24, ஆகிய நான்கு பேரை சோழவரம் போலீசார் கைது செய்தனர்.