திருத்தணி:திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, மத்துார் வழியாக கொத்துார் வரை அரசு பேருந்து தடம் எண்: '97 ஹெச்' இயக்கப்பட்டது.
நேற்று, மதியம் 12:00 மணிக்கு இந்த பேருந்து திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து கொத்துார் நோக்கி புறப்பட்டது.
பேருந்தின் டிரைவராக ஆதிஷ்வரன், 50; கண்டக்டராக கோவிந்தசாமி, 50, ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இந்த பேருந்து, மத்துார் அம்மன் கோவில் அருகில் சென்றபோது, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 'பிளஸ் டூ' மாணவர்கள் மூன்று பேர் பேருந்தில் ஏறினர்.
கண்டக்டர் கோவிந்தசாமி, மாணவர்களிடம் படியிலிருந்து ஏறி இருக்கையில் உட்காருமாறு அறிவுறுத்தினார்.
இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் கண்டக்டர் முகத்தின் மீது தாக்கி, மூக்குக் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினர்.
இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மத்துார் சாலையில் பேருந்தை நிறுத்திவிட்டு இயக்காமல் புறக்கணித்தனர்.
தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் வெண்ணிலா சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பேசி சமரசம் செய்தார்.
பின், மாலை 4:00 மணிக்கு பேருந்து புறப்பட்டு திருத்தணி வந்தடைந்தது.
இது குறித்து டிரைவர் ஆதிஷ்வரன் திருத்தணி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் மீது போலீசார் விசாரிக்கின்றனர்.