புதுடில்லி: மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன், இம்மாதம் 11ம் தேதியன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டத்தில் பேச உள்ளார்.
பட்ஜெட்டுக்குப் பின் நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி நிர்வாக குழுவினரிடன் பேசுவது வழக்கமான ஒரு நிகழ்வாகும்.
பட்ஜெட்டுக்கு பிறகான இந்த சந்திப்பின் போது, நிர்மலா சீதாராமன், நிதி ஒருங்கிணைப்புக்கான திட்டங்கள் மற்றும்அதிக மூலதன செலவுகளுக்கான திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள், புவிசார் அரசியல் அழுத்தங்கள் காரணமாக சந்தித்து வரும் அதிக வட்டி சூழலை கருத்தில் கொண்டு, பட்ஜெட் அறிவிப்பின் வாயிலாக வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும், நிர்வாக குழுவினர் மத்தியில் பேச உள்ளார்.
அடுத்த நிதியாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதமாக இருக்கும் என, பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், நிதிப் பற்றாக்குறையை 2025 - 26 நிதியாண்டில், 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.