புதுடில்லி: இந்தியா, 2027 - 28 நிதியாண்டில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் என, 'நிடி ஆயோக்'கின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார அறிஞருமான அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்தியா உயர் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. தற்போது, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நிலையில், 2027 - 28ல் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயர்வை காணும் என கருதுகிறேன்.
பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியா 6.5 சதவீத வளர்ச்சியை காணும் என தெரிவித்திருந்தாலும், அறிக்கையில் மேலும் வளர்ச்சியை காண்பதற்கான அம்சங்கள் நிறைய இருப்பதை காண்கிறேன்.
இந்தியா மீண்டும் 7 சதவீத வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என கருதுகிறேன். இந்தியாவில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டு, பொருளாதார பலகீனங்கள் களையப்பட்டு உள்ளன. குறிப்பாக, வங்கிகளின் வாராக் கடன்கள் குறைந்துள்ளன.
கார்ப்பரேட் நிறுவன செயல்பாடுகள் நன்றாக உள்ளன. இது முதலீடுகளில் பிரதிபலிக்கிறது. பல பெரிய கார்ப்பரேட்டுகள் முதலீடுகளை மேற்கொண்டு வருவதை காண்கிறோம்.
இந்த அரசு தன்னுடையபலத்தை உணர்ந்துள்ளது. கடைசி முழு பட்ஜெட் என்றாலும் கூட, அதை ஜனரஞ்சகமான பட்ஜெட்டாக நீங்கள் காணாததற்கு இதுவே காரணம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.