வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வேலுார்:முதல்வர் சென்ற ரயிலை அபாய சங்கிலி பிடித்து நிறுத்திய பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள ஆய்வில் முதல்வர் என்ற புதிய திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் வேலுாரில் துவக்கி வைத்தார். இதற்காக இரண்டு நாளாக நேற்றும், இன்றும் முதல்வர் ஸ்டாலின் வேலுாரில் தங்கியிருந்தார். இன்று விழா முடிந்ததும் வேலுார் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இரவு 7: 23 மணிக்கு சென்னை சென்ற தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் சென்றார்.
இதற்காக அந்த ரயிலில் சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டது. ரயில் சென்ற சிறிது நேரத்தில் காட்பாடி அருகே முகுந்தராயபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இரவு 7:29 மணிக்கு அந்த ரயில் நிறுத்தப்பட்டது.முகுந்தராயபுரம் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் ரயில் என்ஜினுக்கு பின்னால் மூன்றாவது பெட்டியில் இருந்த ஒரு பெண் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் நின்றது தெரிய வந்தது. அந்த பெண்ணை நடத்திய விசாரணையில், ரயில் பெட்டியில் மாட்டியிருந்த தன் கைப்பையை எடுத்த போது தவறுதலாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது தெரியவந்தது.
இதனால் அங்கு ஒன்பது நிமிடங்கள் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. முதல்வர் பயணம் செய்த ரயில் திடீரென நின்றதால் அவரது பாதுகாப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த பெண்ணை ரயிலில் இருந்து முகுந்தராயபுரம் ரயில்வே அதிகாரிகள் இறக்கினர். அவரிடம் முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.