புதுடில்லி: மாதாந்திர ஜி.எஸ்.டி., வசூல், இனி சராசரியாக 1.50 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் விவேக் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிதது உள்ளதாவது:
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, இறக்குமதி அதிகரிப்பு ஆகியவை காரணமாக, அடுத்த நிதியாண்டில் வரி வசூல் அதன் இலக்கை எட்டும். கடுமையான தணிக்கைகள், வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை காரணமாக ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., மாத வசூல் சராசரியாக, 1.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது அடுத்த நிதியாண்டில், 1.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.
தற்போது, வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இருந்தபோதிலும், இதை மேலும் அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆன காலத்துடன் ஒப்பிடுகையில், வரி செலுத்துவோர் எண்ணிக்கை தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.