புதுடில்லி:அண்மைக் காலமாக தொலைபேசி அழைப்புகள் மற்றும் சேவைகள் குறித்து புகார்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்', தொலைதொடர்பு நிறுவனங்களுடன் பேச்சு நடத்த உள்ளது.
தொலைபேசி நிறுவனங்களுடனான இந்த சந்திப்பு, 17ம் தேதி நடைபெற இருப்பதாக, டிராய் தெரிவித்துள்ளது.
தொலைபேசி அழைப்புகள் துண்டிக்கப்படுவது, வழங்கப்படும் சேவைகளின் தரம், '5ஜி' சேவைக்கான விதிமுறைகள் ஆகியவை குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கபடும் என தெரிகிறது.
நாட்டில் 5ஜி சேவை வசதிகள் அறிமுகம் ஆகி வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவைகள் வழங்குவது குறித்த நடவடிக்கைகளில், டிராய் தீவிரம் காட்டி வருகிறது.
தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென இணைப்பு துண்டிக்கப்படுவது, 'நெட்வொர்க்' பிரச்னைகள் ஆகியவை குறித்து கடந்த சில மாதங்களாக அதிக புகார்கள் வருவதை அடுத்து, அது குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 200 நகரங்களுக்கு மேல் 5ஜி சேவை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதியன்று, இது போன்றதொரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது டிராய். அந்த கூட்டத்தில், தொலைதொடர்பு கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வரும் 17ம் தேதியன்று மீண்டும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அண்மையில் தொலைதொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொலைதொடர்பு சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான கூடுதல் வழிமுறைகளை வகுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.