மும்பை: இந்தியாவின் வேலையின்மை விகிதம், கடந்த ஜனவரி மாதத்தில் 7.14 சதவீதமாக குறைந்துள்ளதாக, சி.எம்.ஐ.இ., எனும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சி.எம்.ஐ.இ., வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வேலையின்மை விகிதம்கடந்து ஆண்டு டிசம்பரில்8.30 சதவீதமாகவும், நவம்பரில் 8 சதவீதமாகவும், செப்டம்பரில் 6.43 சதவீதமாகவும் இருந்தது. ஜனவரியில் இது 7.14 சதவீதமாக குறைந்துள்ளது.
ஜனவரியில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.55 சதவீதமாக இருந்தபோதும், கிராமப்புற வேலையின்மை 6.48 சதவீதமாக குறைந்துள்ளது.
மாநிலங்களை பொறுத்தவரை வேலையின்மை ஜம்மு - காஷ்மீரில் அதிகபட்சமாக 21.8 சதவீதமாகவும், ஹரியானாவில் 21.7 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 21.1 சதவீதமாகவும் உள்ளன.
புதுடில்லியில் வேலையின்மை விகிதம் 16.7 சதவீதமாகவும், கோவாவில் 16.2 சதவீதமாகவும், தமிழகத்தில் 1.8 சதவீதமாகவும், மத்தியப் பிரதேசத்தில் 1.9 சதவீதமாகவும் உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.இ.எல்., மனிதவள சேவைகள் நிர்வாக இயக்கனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதித்ய நாராயண் மிஸ்ரா கூறுகையில், ''கடந்த மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜனவரியில் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. இதுவே ஆண்டின் நல்ல துவக்கமாகும்,'' என்று தெரிவித்துள்ளார்.