புதுடில்லி:அடுத்த மாதத்துக்குள், 'ஹிந்துஸ்தான் ஜிங்க்' நிறுவன பங்குகளில் ஒருபகுதியை, அரசாங்கம் விற்க வாய்ப்புள்ளதாக, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில்,பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வாயிலாக திரட்ட வேண்டிய தொகைக்கான இலக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாயாக தற்போது குறைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, இந்த இலக்கை எட்டும் வகையில், அடுத்த மாதத்துக்குள் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்கும் முயற்சிகள் துவங்கி உள்ளன.
மேலும், எச்.எல்.எல்., லைப்கேர், பி.டி.ஐ.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன்,பி.இ.எம்.எல்., ஆகிய நிறுவனங்களிலும் பங்கு விலக்கல் நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம், உலகின் இரண்டாவது பெரிய ஜிங்க் உற்பத்தி நிறுவனமாகவும், ஆறாவது மிகப்பெரிய வெள்ளி உற்பத்தி நிறுவனமாகவும் உள்ளது.
இந்நிறுவனத்தில் தற்போது அரசின் வசம் 29.54 சதவீத பங்குகள் உள்ளன. கடந்த 2002ம் ஆண்டில், இதன் 26 சதவீத பங்குகளை, அனில் அகர்வால் தலைமையிலான 'வேதாந்தா' நிறுவனத்துக்கு அரசு விற்பனை செய்தது.
இதன் பிறகு, வேதாந்தா நிறுவனம் 2003ல், மேலும் 18.92 சதவீத பங்குகளை அரசிடமிருந்தும், வெளிச் சந்தையில் 20 சதவீத பங்குகளையும் வாங்கியது.
இதன் தொடர்ச்சியாக, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் வேதாந்தாவின் பங்கு 64.92 சதவீதமாக உயர்ந்தது.
நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் 65 ஆயிரம் கோடி ரூபாயை பங்கு விலக்கல் வாயிலாக திரட்ட இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், புதனன்று 50 ஆயிரம் கோடி ரூபாயாக அரசு குறைத்து அறிவித்தது.
இதுவரை, நடப்பு நிதியாண்டில், பங்கு விலக்கல் வாயிலாக 31 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கே திரட்டப்பட்டு உள்ளது.