வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ''வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் மீது இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மீண்டும், மீண்டும் உத்தரவுகளைப் பெற்று நீதிமன்றத்தை தர்மசங்கடம் அடையச் செய்கிறீர்கள்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
நாட்டில் பல்வேறு மத அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக வெறுப்புணர்வை துாண்டும் விதமான கருத்துக்கள் பேசப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இதை தடுக்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான உத்தரவுகளையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
![]()
|
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், ஹிந்து ஜன் ஆக்ரோஷ் மோர்சா என்ற அமைப்பு நாளை மறுநாள் கூட்டம் ஒன்றை நடத்துகிறது. இந்த கூட்டத்துக்கு தடை விதிக்ககோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டு இந்த மனுவை விசாரிக்க அமர்வு ஒப்புக்கொண்டது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஒவ்வொரு முறையும், கூட்டம் தொடர்பான அறிவிப்புகள் வரும்போது, உச்ச நீதிமன்றத்தை நாட முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது போன்ற கூட்டங்கள் நாடு முழுதும் நடக்கின்றன. அப்போதெல்லாம் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், இது எப்படி ஏற்புடையதாகும்.
வெறுப்புணர்வை பேச்சை தடுப்பது தொடர்பாக, இந்த நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது குறித்து, யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி இருக்கையில், மீண்டும், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி உத்தரவை பெற்று தர்மசங்கடம் அடைய செய்கிறீர்கள்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உத்தரவு பிறப்பிக்ககோரி உச்ச நீதிமன்றத்தை அணுக கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, இந்த மனுவை மட்டும் அவசர வழக்காக நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.