சித்தாமூர்:சித்தாமூர் அருகே முகுந்தகிரி ஊராட்சியில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 144 புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்க, முடிவு செய்யப்பட்டது.
மாரியம்மன் கோவில் தெரு மற்றும் பெருமாள் கோவில் தெருவில், சாலையோரத்தில் கட்டப்பட்ட மழை நீர் கால்வாயில், கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர்.
'ஜல் ஜீவன்' திட்டத்தில் அமைக்கப்பட்ட குழாய்கள், கழிவு நீர் செல்லும் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ளதால், குடிநீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அவ்வப்போது வாந்தி, பேதி, மயக்கம் போன்ற உடல்நலக் குறைவு போன்ற கோளாறுகள் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
நேற்று, பள்ளி கட்டட துவக்க விழாவிற்கு வந்த செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபுவிடம், புதிய குடிநீர் குழாய் அமைக்கவும், கழிவு நீர் கால்வாயில் குடிநீர் இணைப்பு அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முறையிட்டனர்.
இதையடுத்து, எம்.எல்.ஏ., பாபு, ஊரக வளர்ச்சி அலுவலர்களிடம், உடனடியாக புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.