மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்திரி நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக, 35.47 ஏக்கர் புன்செய் நிலமும், 85.27 ஏக்கர் நன்செய் நிலமும் உள்ளது.
சிங்கபெருமாள் கோவில் பகுதியில், 7 கடைகள் மற்றும் 404 வீட்டுமனைகள் உள்ளன.
கடைகள் வாடகைக்கும், வீட்டு மனைகள் தரை வாடகைக்கும் விடப்பட்டு உள்ளன.
தரை வாடகையில் உள்ளோர், பல ஆண்டுகளாக, வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.
கோவில் நிர்வாகம் தரப்பில், பல முறை அறிவிப்பு செய்தும், வாடகை பாக்கியை செலுத்தவில்லை.
இதனால், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோவில் எதிரே, தேரடி அருகில் மற்றும் நியாய விலைக்கடை அருகே, பெரிய அளவு 'பேனர்'களில் வாடகை பாக்கி செலுத்தாத, 495 நபர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை அச்சிட்டு, பொது வெளியில் வைத்து உள்ளனர்.
அவர்கள் கோவில் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி மொத்த தொகை, ஒரு கோடியே 39 லட்சத்து 464 ரூபாய் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வாடகை பாக்கி செலுத்த தவறும்பட்சத்தில், உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.