பொள்ளாச்சி:சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, தர்பூசணி விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மழை காலம் நிறைவடைந்து கோடைகாலம் துவங்கியுள்ளது. கோடையை சமாளிக்க மக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழச்சாறு, நுங்கு, தர்பூசணி பழம் போன்றவற்றை சாப்பிட ஆர்வம் காட்டுவர். இதனால், விற்பனையும் களை கட்டும். இந்தாண்டும் சீசன் துவங்கியுள்ள நிலையில், விற்பனைக்காக தர்பூசணி கொண்டு வரப்பட்டுள்ளது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், மொத்த பழ வியாபாரி கடைகளுக்கு தர்பூசணி அதிகளவு வரத்து உள்ளது.
திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும், 100 - 150 டன் வரை விற்பனைக்காக தர்பூசணி கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பனி சீசன் நிலவுவதால், தர்பூசணியை மக்களுக்கும் விரும்பாமல் உள்ளனர்.
மொத்த வியாபாரிகள் கூறுகையில், 'பனிப்பொழிவு காரணமாக, தர்பூசணி விற்பனை மந்தமாக உள்ளது. இதனால், கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் வரவில்லை. உள்ளூரிலும் தர்பூசணி கடைகள் அதிகளவில் அமைக்கவில்லை. இதனால், விற்பனை மந்தமாக உள்ளது.
மொத்த விற்பனையில், தர்பூசணி பழம் கிலோ ஒன்று, 12 - 16 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ரோட்டோர கடைகளில் ஒரு பிளேட் தர்பூசணி, 15 - 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் நாட்களில், தர்பூசணி கடைகளின் எண்ணிக்கையும், விற்பனை அதிகரிக்கும். அப்போது, மேலும், விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது, என்றனர்.