சென்னை:திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வனச்சரக பகுதிகளில், 10 ஏரிகளில், 10,422 அரியவகை பறவைகள் முகாமிட்டுள்ளது வனத்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், ஆண்டு தோறும், ஜன., பிப்., மார்ச் மாதங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
இந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.
முதல்கட்டமாக, ஜன., 28, 29 தேதிகளில் நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பரவலாக அறியப்பட்ட பறவைகள் சரணாலயங்கள், கழிவேலி, சதுப்பு நிலங்களில் வனத்துறையினரும், தன்னார்வ அமைப்பினரும் அதிக அளவில் பங்கேற்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில், செங்குன்றம் பகுதியில், பல்வேறு நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
செங்குன்றம் வனச்சரகர் கிளமென்ட் எடிசன் தலைமையில் வனத்துறை களப் பணியாளர்களும், 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பினரும் இணைந்து பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.
இது குறித்து 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் பறவைகள் ஆர்வலர் பாலாஜி கூறியதாவது:
செங்குன்றம் வனச்சரகத்துக்கு உட்பட்ட, வெங்கல் ஏரி, காவனுார் ஏரி, வெங்ககுப்பம் ஏரி, எனப்பாக்கம், காக்கவாக்கம், அல்லி ஏரி, சீதனஞ்சேரி, ஊத்துக்கோட்டை, சித்தேரி, பென்னனுார் ஆகிய, 10 ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 112 வகையைச் சேர்ந்த, 10, 422 பறவைகள் இருப்பது பதிவு செய்யப்பட்டது.
இந்த கணக்கெடுப்பில் அரிதாகக் காணப்படும், சோலையாடி பறவை இப்பகுதியில் முகாமிட்டு இருப்பது உறுதியானது.
இதே போன்று, 1,450 மீசை ஆலா, 1,253 ஊசிவால் வாத்துகள், 1,080 பெரிய கொக்கு, 900 ஜொலிக்கும் அரிவாள்மூக்கன், 650 தகைவிலான் பறவைகள் காணப்பட்டன.
இதைவிட குறைந்த எண்ணிக்கையில் மற்ற வகை பறவைகள் இருந்தது கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டது.
இது போன்ற இடங்களுக்கு வரும் பறவைகள் குறித்த விபரங்களை ஆவணப்படுத்துவதன் வாயிலாக இங்குள்ள நீர் நிலை சார்ந்த சூழலியலை பாதுகாக்க வழி ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.