செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட மாமண்டூர் பாலாற்று பகுதியில், எட்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கிருக்கும் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, சப்- - கலெக்டர் அலுவலகம் அருகில், அழகேசன் நகர், ரேடியோமலை, பெரியமணியக்கார பகுதிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில், தண்ணீர் நிரப்பப்படுகிறது.
அதன்பின், குழாய் மூலம், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு, வடகிழக்கு பருவ மழையின் போது, பாலாற்றில் அதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது, ஆழ்துளைக் கிணறுகளில் மண் அடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால், வரும் கோடை காலத்தை முன்னிட்டு, ஆழ்துளைக் கிணறுகளை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நகராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள மணலை துார் வாரும் பணியை, புதிய மோட்டார் கேபிள்கள் மற்றும் இரும்பு 'பைப்'புகள் அமைக்க, 23 லட்சம் ரூபாய் மதிப்பில், நகராட்சி பொது நிதியிலிருந்து செயல்படுத்த, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்து, மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.