கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், கந்த சஷ்டி வழிபாட்டு குழுவினர், 43ம் ஆண்டு பழநி பாதயாத்திரையை துவங்கினர்.
கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், கந்த சஷ்டி வழிபாட்டு குழு சார்பில், நேற்று முன்தினம், மாலை, 4:00 மணிக்கு, காவடி வேல் பூஜை முடித்து, வேல் படை, சேவற்கொடி, ஆறுமுகக்காவடியுடன், மலைக்கோவிலில் கிரிவலம் சென்றனர்.
நேற்று, காலை, 6:00 மணிக்கு இறை வழிபாடு முடித்து, 7:00 மணிக்கு கரியகாளியம்மன் கோவிலில் இருந்து, பழநி மலைக்கோவிலுக்கு பாதயாத்திரையை துவங்கினர்.
பாதயாத்திரை குழுவினர், மடத்துக்குளத்தில், இன்று, 3ம் தேதி, 11:00 மணிக்கு சப்த கன்னிமார் பூஜை, வேல் சேவல்கொடி வழிபாடு செய்கின்றனர். அதனை தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு பக்தி மற்றும் பஜனையில் ஈடுபடுகின்றனர்.
நாளை, 4ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, கந்தர் சஷ்டி கூட்டு வழிபாடு செய்த பின், காலை 10:00 மணிக்கு, பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் தரிசனம் மற்றும் பரிகாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
அன்று, பகல், 12:00 மணிக்கு திருஆவினன் குடியில் இறை தரிசனம் மற்றும் கந்தர் சஷ்டி கூட்டு வழிபாடு நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு பழநி மலையடிவாரத்தில், வேல் படை , சேவற்கொடி, கும்மி பாட்டுடன் கிரிவலம் செல்கின்றனர். அதன்பின், பழநி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தரிசனம் செய்கின்றனர்.