பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம், தற்காலிக சந்தை இடமாக மாற்றப்பட உள்ளது. நகராட்சியின் இந்த முடிவுக்கு, கல்வி ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி தேர்நிலையம் மார்க்கெட்டில், காய்கறிகள், வாழை இலை, தேங்காய் கடைகள் உள்ளிட்ட, 100 கடைகள் உள்ளன. பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், மக்களும் காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.
இந்த மார்க்கெட்டை பராமரித்து புதுப்பிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது அரசு, தேர்நிலையம் மார்க்கெட்டை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம், 1.48 கோடி ரூபாய் செலவில் புதிய கடைகள் கட்டப்படவுள்ளது.
இதற்காக, அங்குள்ள கடைகள் காலி செய்ய நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது, வியாபாரிகள் கடைகளை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளி வளாகம்
தேர்நிலையம் மார்க்கெட் பணிகள் முடியும் வரை, தெப்பக்குளம் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட உள்ளது. இதற்காக பள்ளி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது.
வியாபாரிகளுக்கு கடைகள் வைத்துக்கொள்ள இடம் அளந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. தற்காலிக கடைகள் என்றாலும், பள்ளி வளாகத்தில் செயல்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக, கல்வி ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சரியான முடிவல்ல
கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது:
தேர்நிலையம் மார்க்கெட்டுக்கு புதிய கட்டடம் கட்டும் பணி வரவேற்கதக்கது. அதே நேரத்தில், பள்ளி வளாகத்துக்குள் மார்க்கெட் செயல்படுத்துவது சரியான முடிவாக இல்லை.
தெப்பக்குளம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் வரும் வழியை தான், தற்போது சந்தையாக மாற்றியமைக்கின்றனர்.
வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்கும் போது, சந்தையில் காய்கறி விற்பனை நடந்தால், கல்வி கற்பதில் இடையூறு ஏற்படும். சந்தையாக மாற்றினால், பலரும் வந்து செல்லக் கூடிய இடமாக மாறிவிடும். இதனால், மாணவ, மாணவியர் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். மேலும், சுகாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.
ஏற்கனவே, நகராட்சி பள்ளி அருகே அமைந்துள்ள பொது கழிப்பிடத்தால், மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். தற்போது சந்தையும் வந்தால் மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவர்.
நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஒரே காரணத்துக்காக, பள்ளி வளாகத்தை சந்தையாக மாற்ற நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து இருக்கலாம்.
மாற்று இடம்
நகராட்சியில், பயன்பாடு இல்லாத மாற்று இடங்களை தேர்வு செய்து வழங்கலாம். மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானம் தற்போது காலியாக தான் உள்ளது. இந்த இடத்தை தேர்வு செய்து, தற்காலிக மார்க்கெட் செயல்படுத்தலாம்.
மாற்று திட்டங்களை பற்றி யோசிக்காமல், பள்ளி வளாகத்தை ஒதுக்கீடு செய்த தகவல் அதிருப்தி அளிக்கிறது. இந்த முடிவை மாற்ற நகராட்சி நிர்வாகம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தொந்தரவு இருக்காது
நகராட்சி பொறியாளர் குருசாமி கூறுகையில், ''தேர்நிலையம் மார்க்கெட் புதுப்பிக்கும் பணிக்காக, தெப்பக்குளம் நகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படாது,'' என்றார்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி வளாகத்துக்குள் சந்தை அமைக்க வேண்டாம், என பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நகராட்சிக்கு அனுப்பியுள்ளோம். தற்காலிகமாக, மூன்று மாதம் என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.மக்கள் நலன், மாணவர்கள் நலன் கருதி, மகாலிங்கபுரத்துக்கு, தற்காலிகமாக மார்க்கெட்டை கொண்டு செல்வதே சிறந்த முடிவாக இருக்கும். நகராட்சி சார்பில், பள்ளி கட்டடம் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு சந்தை கொண்டு வருவதும், கொண்டு வராததும் அவர்கள் கையில் தான் உள்ளது,' என்றனர்.