உடுமலை:நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்துக்குட்பட்ட ரோடுகளில், விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் பணிகள் துவங்கி தீவிரமடைந்துள்ளது.
உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின், கீழ், உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலை, பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை (ஒரு பகுதி), மாவட்ட முக்கிய ரோடுகள் மற்றும் மாவட்ட இதர ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில், போக்குவரத்து அதிகரித்துள்ள ரோடுகளில், மேம்பாட்டு பணிகள் குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், இந்தாண்டு, முதற்கட்டமாக, விரிவாக்கம், புதுப்பித்தல் உட்பட பணிகள் துவங்கியுள்ளது.
குறிப்பாக, பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, 2 கி.மீ., தொலைவுக்கு, விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதே போல், மாவட்ட முக்கிய ரோடான சின்னாறு ரோட்டில், மானுப்பட்டி அருகே, ரோடு விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மேலும், உடுமலை - திருமூர்த்திமலை ரோட்டில், 3.8 கி.மீ., தொலைவுக்கு மேம்பாடு செய்தல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல், உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில், 6.4 கி.மீ., தொலைவுக்கு, புதுப்பிக்கபட உள்ளது.
ஆனைமலை - பூலாங்கிணறு ரோட்டில், 2 கி.மீ., தொலைவுக்கு மேம்பாடு செய்யப்படுகிறது.
இதில், சில பணிகள் துவங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'தற்போது, 34.30 கி.மீ.,க்கு ரோடு அகலப்படுத்துதல், மேம்பாடு செய்தல், தடுப்புச்சுவர், சிறுபாலங்கள் கட்டுதல் மற்றும் சிறப்பு பழுது பார்த்தல் பணிகளுக்கு, சுமார், 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளது,' என்றனர்.
அரசின் நிதி ஒதுக்கீடு தேவை
திருப்பூர் மாவட்டம், 2009ல், உருவாக்கப்பட்ட போது, உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய பாலங்கள் கட்டப்பட்டது. அதன்பின்னர் பெரிய மேம்பாட்டு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்த ரோட்டில், போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கான கருத்துருவும், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு திட்டங்கள் சார்பில், அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதே போல், கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்லும் ரோட்டில், தமிழக பகுதியில், நீண்ட காலமாக ரோடு விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.
இரு மாநில வாகன ஓட்டுனர்களை சிரமப்படுத்தும், கொண்டை ஊசி வளைவு மேம்பாடும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மக்கள் பிரதிநிதிகள் அரசை வலியுறுத்தி, நிதி ஒதுக்கீட்டை பெற்றுத்தர வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.