உடுமலை:உடுமலை மின்பகிர்மான அலுவலகத்தை, பொள்ளாச்சிக்கு இடம் மாற்றுவதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், சொந்த கட்டடத்தில் இயங்கிவருகிறது. மின் பகிர்மான எல்லையில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன.
உடுமலை மின் பகிர்மான அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. மின் பகிர்மான அலுவலகத்தை இடம் மாற்றக்கூடாது என, பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு மாநில இணை பொதுச்செயலாளர் சரவணன், கலெக்டரிடம் மனு அளித்தார்.
சரவணன் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம், உடுமலை மின்பகிர்மான அலுவலகத்தை, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சிக்கு இடம் மாற்றினால் நிர்வாக சிக்கலும், பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும் ஏற்படும் என, கலெக்டரிடம் மனு அளித்தோம். மின்வாரிய நிர்வாக உயர் அதிகாரிகளுடன் பேசி, இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து சுமூக தீர்வு ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை மின்பகிர்மான அலுவலகத்தை, பொள்ளாச்சிக்கு மாற்றுவதற்கான திட்டம் ஏதுமில்லை; அதற்கான எந்த கருத்துருவும் அனுப்பப்படமாட்டாது.
மின்பகிர்மான அலுவலகம் தொடர்ந்து உடுமலையிலேயே செயல்படும் என, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதற்காக, மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.