புழல், சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம், குமரன் தெருவை சேர்ந்தவர் சுதாசந்தர், 22. அவர், கடந்த 31ம் தேதி இரவு, இளம்பெண் ஒருவருடன், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, லட்சுமிபுரம், வில்லிவாக்கம் சாலை சந்திப்பில், ஆட்டோவில் வந்து வழி மறித்த மர்மகும்பல், சுதாசந்தரை மட்டும் சரசாரியாக வெட்டிக்கொன்று, தப்பி சென்றது.
இது குறித்து, புழல் போலீசார், வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரித்தனர்.
அதில், சுதாசந்தருடன் வந்த இளம்பெண், ஆவடி வெள்ளச்சேரியை வசந்த் என்பவரின் மனைவி ராகவி, 19 என்பதும், அவர்களுக்கு, 2 வயதில் பெண் குழந்தை இருப்பதும் தெரிந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்த ராகவி, முன்னாள் காதலன் சுதாசந்தருடன், லட்சுமிபுரத்தில் வசித்து வந்துள்ளார்.
அது பற்றி அறிந்த ராகவியின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.
அதையடுத்து, 31ம் தேதி இரவு, ஆவடியை சேர்ந்த ராகவியின் அண்ணன் ராபின், 21, சித்தப்பா உதயராஜ், 23, மற்றொரு உறவினர் சுஷ்மிதா, 28, அம்பத்துார், ஒரகடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக், 25 ஆகியோர், சுதாசந்தரை வெட்டிக்கொன்றது தெரியவந்தது.
புழல் போலீசார், மேற்கண்ட நால்வரையும், நேற்று காலை, கைது செய்தனர். அவர்கள், பயன்படுத்திய கத்திகள் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.