கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில், வாலிபர் ஒருவர், சென்னைக்கு வேலைக்கு சென்று பணி முடிந்து, தண்டவாளத்தை ஒட்டியபடி வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.
பூட்டை உடைத்து திருட்டு
அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், அவரை வழிமறித்து, அவரிடம் இருந்த 'மொபைல் போன்' மற்றும் பணத்தை பிடுங்கி சென்றனர். அவர், அந்த வழியாக இரவு ரோந்து வந்த போலீசாரிடம் நடந்ததை கூறினார்.
மேலும், கணபதி நகர் விரிவு, இரண்டாவது பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே, மெடிக்கல் மற்றும் 'பிளாஸ்டிக்' தயாரிக்கும் கடைகளின் பூட்டை உடைத்து, 'லேப்டாப், டி.வி' உள்ளிட்ட பொருட்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அதேபோல, வீரபாகு நகர் காளியம்மன் கோவில் அருகே உள்ள நாகராஜ் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தின் லாக்கரை உடைத்து திருடிச் சென்றுள்ளனர்.
இதில், சத்தம் கேட்டு நாகராஜ் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்ததைக் கண்டதும், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி ஓடினர். தப்பி ஓடும் போது, ரோந்து வந்த போலீசாரிடம், மூன்று பேரில் இருவர் சிக்கினார்.
பல்வேறு வழக்குகள்
பிடிபட்ட இருவரையும், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில், மூன்று பேரும், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மூன்று பேர் மீதும், ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலன் என்ற சின்ன அட்டி, 21, தினேஷ், 21, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், அவர்களிடமிருந்து டி.வி., லேப்டாப், மூன்று மொபைல் போன்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், தப்பி ஓடிய சந்தோஷ்குமார், 22, என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.