பொள்ளாச்சி:'பொள்ளாச்சியில், தி.க., கூட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது,' என, பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், கூடுதல் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு, மாவட்ட பொதுச்செயலாளர் துரை மற்றும் நிர்வாகிகள், ஹிந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் பாலசந்திரன் மற்றும் ஹிந்து அமைப்பினர், கூடுதல் எஸ்.பி., பிருந்தாவிடம் மனு கொடுத்தனர்.
அதில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், வரும், 6ம் தேதி தி.க., தலைவர் வீரமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வீரமணி பேசும் போது, ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் குறித்தோ பேசி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவார். எனவே, அவரது பொது கூட்டத்துக்கு அனுமதியளிக்க கூடாது. மீறி அனுமதித்து, ஹிந்து அமைப்புகள் குறித்து பேசினால், பா.ஜ., சார்பாக எதிர்வினையாற்றுவோம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.