பொள்ளாச்சி: இளம் வயதில் இறந்த டாக்டரின் கண்கள், நான்கு பேர் பயன்பெறும் வகையில் தானமாக வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி, வெங்கட்ரமணன் வீதியை சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் முரளி என்கிற பழனிக்குமார், 55. இவரது மகன் பாலாஜிநாராயணன், 25, ரஷ்யாவில் மருத்துவ படிப்பு முடித்து இந்தியா வந்தார். கடந்த, 2020ல் புதுடில்லியில் தேர்வு ஒன்று எழுதி மருத்துவராக தேர்ச்சி பெற்று, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் கொரோனா காலத்தில் மருத்துவ சேவை செய்தார்.
கோவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றினார்.
ரஷ்யாவில் உடன் படித்த சென்னையை சேர்ந்த திலீப் உடல்நலக்குறைவால் இறந்தார். அந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, கடந்த, 26ம் தேதி சென்னை சென்றார். கடந்த, 28ம் தேதி அங்கிருந்து கிளம்பிய போது, மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் பொள்ளாச்சியில் அடக்கம் செய்யப்பட்டது. பாலாஜி நாராயணன் கண்தானம் செய்திருந்ததால், சென்னை சங்கரா நேத்ராலயா மருத்துவமனைக்கு கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
அவரது கண்ணின் கருவிழிகள் இருவருக்கும், கண்ணில் உள்ள வெண் படலம் இருவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
நான்கு பேருக்கு கண் பார்வை கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.