அண்ணா நகர் மண்டலத்தில் கடந்த ஜன., மாதம் மட்டும், 5.84 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்தில், 94வது வார்டு முதல், 108 என, மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
இந்த மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சொத்து வரி பாக்கி வைத்துள்ள கடைகள் மற்றும் தொழில் உரிமம் புதுப்பிக்காத நிறுவனங்களில், வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, பல ஆண்டுகளாக நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகையை வசூலித்து வருகின்றனர்.
அந்த வகையில், அண்ணா நகர் மண்டலத்தில், 2023 ஜன., மாதம் மட்டும், 5.84 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மத்திய உதவி வருவாய்த்துறை அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட அம்பத்துார், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் தொடர்ந்து நிலுவையில் உள்ள வரி பாக்கி, தொழில் உரிமம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அந்த வகையில், அண்ணா நகர் மண்டலத்தில் மட்டும், 2023 ஜன., மாதம் மட்டும், 5.84 கோடி ரூபாய் சொத்து வரி மட்டும் வசூலித்துள்ளோம்.
மேலும், உரிமம் புதுப்பிக்காத மற்றும் உரிமம் பெறாத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதேபோல், பொதுமக்கள் சொத்து வரியை அரை ஆண்டின் துவக்கத்திலேயே கட்ட முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர்-.