பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகரில் ஹிந்து அமைப்புகள் குறித்து, அவதுாறு பரப்பும் வகையில், சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி ஜில்லா விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள், கூடுதல் எஸ்.பி., பிருந்தாவிடம் புகார் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: காந்தி படுகொலையில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இதர ஹிந்து அமைப்புகளை இணைத்து, பொள்ளாச்சி நகரப்பகுதியில் சுவரொட்டிகள், பாசிச எதிர்ப்பு மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி கொலை வழக்கின் தீர்ப்பில், காந்தி கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது, என, உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை அறிந்தும், வேண்டும் என்றே திட்டமிட்டு சிலர், சமூக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
சுவரொட்டியில் உள்ள மொபைல்போன் எண்கள் கொண்ட நபர்கள் மற்றும் அச்சடித்த அச்சகத்தின் மீது, கடும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அனைத்து ஹிந்து அமைப்புகளும் இணைந்து அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.