நாமக்கல்:'எரிசாராய ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதமாக விற்பனை செய்யாமல், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 லட்சம் லிட்டர் ஸ்பிரிட் தேக்கமடைந்துள்ளது' என, மோகனுார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணிவண்ணன், பொதுச்செயலர் மணிவேல் ஆகியோர், சர்க்கரைத்துறை ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2022 - 23ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில், கரும்பு சப்ளை செய்யும் அங்கத்தினர்களுக்கு, டன் ஒன்றுக்கு, 2,821.50 ரூபாய் வழங்க வேண்டிய நிலையில், கரும்பு சப்ளை செய்யும் அங்கத்தினர்களுக்கு, டன் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் மட்டுமே ஆலை நிர்வாகம் வழங்கி வருகிறது.
ஆலையில் இருந்து வழங்கப்படும், 2,000 ரூபாயில், வெட்டுக்கூலி சராசரியாக, 1,200 முதல், 1,300 ரூபாய் வரை கொடுக்கப்பட்டு, 700 முதல், 800 ரூபாய் மட்டுமே மீதமாகிறது.
அவற்றை கொண்டு கரும்பை பராமரிக்க முடியாத நிலையில், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆலைக்கு 'சப்ளை' செய்யப்பட்ட கரும்புக்கு உரிய தொகை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்காமல் உள்ளதால், விவசாயிகள் ஆலைக்கு வெட்டப்பட்ட மறுதாம்பு கரும்பை பராமரிக்க முடியாமல், ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். அதனால், ஆலைக்கு பதிவாகக்கூடிய கரும்பு பதிவில் குறைவு ஏற்பட்டுள்ளது.
எரிசாராய ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதமாக விற்பனை செய்யாமல், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 லட்சம் லிட்டர் ஸ்பிரிட் தேங்கமடைந்துள்ளது.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை, முழுமையாக இம்மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.