திருவொற்றியூர், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. தைப்பூச திருவிழாவில், உற்சவர் சந்திரசேகரர் - திரிபுர சுந்தரி தாயார், ஆதிஷேச குளத்தின் தெப்பத்தில் எழுந்தருளி, நீராழி மண்டபத்தை சுற்றி வருவர்.
கடந்த, 2015ல் கொட்டித்தீர்த்த கன மழையால் ஆதிஷேச குளம் பாதி நிரம்பி, தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. அதன் பின் குளம் நிரம்பவில்லை.
இதனால், கோவிலுக்குள் இருக்கும் பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்ப திருவிழாவை, கோவில் நிர்வாகம் நடத்தியது.
பக்தர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து, கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நடவடிக்கையால், குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் பாதை அமைக்கப்பட்டது.
இந்நடவடிக்கையால், இந்தாண்டு பெய்த மழை நீர், குளத்திற்கு எளிதாக வந்து சேர்ந்தது. 2.50 ஏக்கர் பரப்புடைய ஆதிஷேச தீர்த்த குளத்தில், 6 - 7 அடி உயரத்திற்கு மழை நீர் சேகரமாகி உள்ளது.
இதனால், தெப்போற்சவ நிகழ்வை இம்முறை வெகு விமரிசையாக நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, குளத்தின் படிக்கட்டுகள் சுத்தம் செய்யப்பட்டு, தெப்பம் தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 20 அடி அகலம், 20 அடி நீளம் என்ற அளவில், தெப்பம் அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்தாண்டு தைப்பூசத்தையொட்டி, வரும் 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு, சந்திரசேகரர் - திரிபுர சுந்தரி தாயார், தெப்பத்தில் எழுந்தருளி, நீராழி மண்டபத்தை வலம் வரவுள்ளனர்.
ஏழு ஆண்டுகளுக்குப் பின், சந்திரசேகரர், தெப்பத்தில் எழுந்தருளி, நீராழி மண்டபத்தை வலம் வரும் நிகழ்வை காண, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகளை, அறநிலைய துறை உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான கோவில் ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.