வால்பாறை:வாலபாறையை சுற்றியுள்ள பன்னிமேடு, ேஷக்கல்முடி, புதுக்காடு, கருமலை, பச்சமலை, சின்கோனா, சிறுகுன்றா உள்ளிட்ட எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
கருமலை ஜே.இ., பங்களா ரோட்டில் முகாமிட்ட யானைகள், அதிகாலையில் பணிக்கு ஏற்றி சென்ற தொழிலாளர்களை விரட்டின. டிரைவரின் துரித நடவடிக்கையால் அனைவரும் உயிர்தப்பினர்.
பச்சமலை எஸ்டேட் பகுதிக்கு குட்டிகளுடன் வந்த யானைகள், அங்குள்ள இரண்டு தொழிலாளர்களின் வீடுகளையும், பம்ப்செட் அறையையும் இடித்து சேதப்படுத்தின.
நள்ளிரவில் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் திடீரென்று வந்ததால், யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனையடுத்து, தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.