விக்கிரவாண்டி:வீடூர் அணையிலிருந்து, பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப் பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர் அணையின் உயரம் 32 அடி; மொத்த கொள்ளளவு 605 மில்லியன் கன அடி. கடந்த ஜனவரி 14ல், அணை முழு கொள்ளளவை எட்டியது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்காக நேற்று முதல் வரும் ஜூன் 15ம் தேதி வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, நேற்று காலை 8;00 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் மோகன் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
பின் அவர் கூறுகையில், ''இதனால், தமிழக பாசன பகுதியில் 2,200 ஏக்கர், புதுச்சேரியில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நிறைவான மகசூல் பெற வேண்டும்,'' என்றார்.