சென்னை, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கி, தேடப்பட்ட ரவுடி, கூட்டாளிகளுடன் கைதானார்.
சென்னை மாநகர போலீசின் தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு போலீசார், தொடர் குற்றங்களில் ஈடுபட்ட, திருவள்ளூர், மணவாள நகர், காந்தி சாலையை சேர்ந்த ரவுடி சதீஷ்குமார், 29 என்பவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம், எழில் நகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் பதுங்கி இருந்த போது, நேற்று அதிகாலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவருடன், கூட்டாளிகள் தணிகாசலம், 20, மாது, 24, அணில் சதீஷ், 26 ஆகியோரும் சிக்கினர்.
அவர்கள், ஒருவரை கொலை செய்யும் சதி திட்டத்துடன் பதுங்கி இருந்தது, விசாரணையில் தெரியவந்தது.
முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார் மீது ஓட்டேரி, செம்பியம், மாதவரம், திருவேற்காடு, கொடுங்கையூர் காவல் நிலையங்களில், கொலை வழக்கு, இரண்டு கொலை முயற்சி வழக்கு என மொத்தம், 12 குற்றவழக்குகள் உள்ளன. அவர், பிரபல ரவுடி அகரம் கதிரின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ரவுடி 'சீசிங்' ராஜாவுடன் சேர்ந்து, சமீப காலமாக சென்னை புறநகர்களில், நிலம் தொடர்பான கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளார்.
குற்ற வழக்குகளில், போலீசாரிடம் சிக்காமல், நீதிமன்றம் மூலமே ஆஜராகி வந்துள்ளார். சதீஷ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.