கடலுார்:வடலுார் தைப்பூச விழாவை முன்னிட்டு, வடலுார் வழியாக, வரும் 5 - 7ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடலுார் மாவட்டம், வடலுாரில் தைப்பூச விழா, வரும் 5ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, பிப்., 5 முதல் 7ம் தேதி வரை, விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம், நெய்வேலி, வடலூர் வழியாக கடலுாருக்கு நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விழுப்புரத்தில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 9:55 மணிக்கு விருத்தாசலம் வருகிறது. அங்கிருந்து 10:40க்கு வடலுார், 11:20க்கு கடலுார் சென்றடைகிறது.
அதேபோல, கடலுாரில் இருந்து பகல் 11:30 மணிக்கு புறப்படும் ரயில் 12:10க்கு வடலுார் வந்து, பகல் 1:00 மணிக்கு விருத்தாசலம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் பகல் 1:20க்கு விருத்தாசலத்தில் புறப்படும் ரயில் மதியம் 2:00 மணிக்கு வடலுார் வருகிறது. 2:40க்கு கடலுார் சென்றடையும். மாலை 2:50க்கு கடலூரில் புறப்படும் மற்றொரு ரயில், மாலை 3:25க்கு வடலுார் சென்று, 4:10க்கு விருத்தாசலம், மாலை 5:15க்கு விழுப்புரம் சென்றடையும்.
இந்த ரயில்கள் அனைத்தும் கடலுார் முதுநகர் துறைமுக சந்திப்பில் இருந்து இயக்ப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயில்கள், பயணியர் பயன்பாட்டை பொருத்து கடலூர்- விருத்தாசலம் பாதையில் கூடுதலாக இயக்கப்படும்.
இத்தகவலை தென்னக ரயில்வே முதுநிலை கோட்ட மேலாளர் ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.