வால்பாறை:வால்பாறை அருகே, முடீஸ் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறையில் இருந்து, ஏழு கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது முடீஸ் பஜார். இந்த பகுதியை சுற்றிலும், கெஜமுடி, முத்துமுடி, நல்லமுடி, தோணிமுடி, ஆனைமுடி, வாகமலை, ைஹபாரஸ்ட், சங்கிலி ரோடு, பன்னிமேடு உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்கள் உள்ளன.
இந்த எஸ்டேட்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பிலும், பொள்ளாச்சி கோட்டத்தின் சார்பிலும், நாள் தோறும், 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஒரே ஒரு பஸ் மட்டுமே வந்து செல்லும் அளவில், பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறுகலான பஸ் ஸ்டாண்டில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் திறந்தவெளியில் மழையிலும், வெயிலிலும், பல மணி நேரம் காத்திருந்து பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நகராட்சி கவுன்சிலர் மணிகண்டனிடம் கேட்ட போது, ''முடீஸ் பஜார் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் தனியார் எஸ்டேட் வசமுள்ளது. இந்தப்பகுதியில் நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் கட்ட மேற்படி இடத்தை, எஸ்டேட் நிர்வாகங்கள் நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் நகராட்சி கூட்டத்தில் முறையாக அனுமதி பெற்று, பஸ் ஸ்டாண்ட் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.