கொரட்டூர், ற்றச் சம்பவங்களை தடுக்க, பொதுமக்களுடன் போலீசார் தொடர்பில் இருக்கும் வகையில், அக்கம் பக்கம் கண்காணிப்பு' என்ற, ஆவடி மாநகர போலீசாரின் 'உஷார்' திட்டம் துவக்கப்பட்டது.
சென்னை கொரட்டூரில், 'அக்கம் பக்கம் கண்காணிப்பு' என்ற, குற்றங்களை தடுக்கும் வகையிலான போலீசார், பொதுமக்கள் இணைந்து செயலாற்றும் உஷார் திட்டம் துவக்கப்பட்டது.
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் நேற்று மாலை, இந்த விழிப்புணர்வு திட்டத்தை துவக்கி வைத்தார்.
அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட குக்கிராமத்திற்கு, ஒரு போலீஸ்காரர் தொடர்பாளராக நியமிக்கப்படுவார்.
அவர், அந்த கிராமங்களில் நடக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, குற்றங்கள் என, அனைத்து தகவல்களையும் முழுமையாக சேகரிப்பார்.
அதற்காக அவர், சைக்கிள் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுவார்.
அவருக்கு உதவும் வகையில் கிராமத்தினர் மூலம், தகவல் குழு அமைக்கப்படும்.
அந்த குழுவின் மூலம் கிராமத்தில், குழந்தை, பள்ளி, கல்லுாரி மாணவியர், இளம்பெண் மற்றும் முதியோருக்கு எதிரான குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்த தகவல்கள், போலீஸ்காரருக்கு தெரிவிக்கப்படும்.
அவர், உயரதிகாரிகளுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க உதவுவார்.
இந்த உஷார் திட்டம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலைய எல்லையில் உள்ள கிராமங்களில், நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது.
அதற்காக, 100 போலீசாருக்கு புதிய சைக்கிள்கள் வழங்கப்பட்டு, கொரட்டூரின் முக்கிய சாலைகளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், உயரதிகாரிகள் மற்றும் கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போலீசார் பங்கேற்றனர்.