ஆத்துார்:ஆத்துார் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், ஆத்துார், வாழப்பாடி வக்கீல் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. இதில், ஆத்துார் டி.எஸ்.பி., ராமச்சந்திரன், ஆத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தம்மம்பட்டி எஸ்.ஐ., உதயகுமாரை கண்டித்து பேசினர்.
தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் சங்க மாநில இணை செயலர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
வக்கீல் கண்ணன் மீது கடந்த ஜன., 20ல், ஆத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார்.
வக்கீல் நவீன்பிரகாஷை, தம்மம்பட்டி எஸ்.ஐ., உதயகுமார் குண்டு கட்டாக துாக்கிச்சென்று கைது செய்வதாக மிரட்டியுள்ளார்.
உயர்நீதிமன்றம், வக்கீல் மீது வழக்கு பதிய உத்தரவிடவில்லை. குற்றவாளிக்கு ஆதரவாக உள்ள நபர் மீது வழக்கு பதிவு செய்யும்படி கூறியதை, அந்த வழக்கை நடத்திய வக்கீல் மீது, ஆத்துார் டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை திரும்ப பெறவில்லை எனில் மாநிலம் தழுவிய அளவில் வக்கீல் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். போலீசாரின் செயலை கண்டித்து, நீதிமன்ற பணியை புறக்கணித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.