மேட்டுப்பாளையம்:ரோட்டின் ஓரத்தில் உள்ள வனப்பகுதியில், காலாவதியான மருந்து, மாத்திரைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மது பாட்டில்கள் போடுவதால், வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளை, பிரிக்கும் பகுதியாக, கோத்தகிரி ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டின் வழியாக தினமும், சுற்றுலா வாகனங்கள் உள்பட, நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த வனப்பகுதிகளில்,யானைகள், காட்டு மாடுகள், மான்கள், சிறுத்தை, என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை இரை தேடவும், தண்ணீர் குடிக்கவும், ஊட்டி, கோத்தகிரி ரோடுகளை கடந்து, இரண்டு வனப்பகுதிகளுக்கும் சென்று வருகின்றன. மலைப்பகுதியில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள், வனவிலங்குகள் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.
இதை தடுக்க ஊட்டி, கோத்தகிரி ரோட்டில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வனவிலங்குகள், வாகனங்கள் மோதல் குறைந்துள்ளன. ஆனால் ரோட்டின் ஓரத்தில் உள்ள வனப்பகுதிகளை, பொதுமக்கள் குப்பை தொட்டியாக மாற்றி உள்ளனர்.
கோத்தகிரி ரோட்டின் இரு பக்கமுள்ள வனப்பகுதியில், மது பாட்டில்கள், கெட்டுப்போன உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், குப்பைகள் போடப்பட்டுள்ளன. இது அல்லாமல், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், ரோட்டின் ஓரத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கிடக்கின்றன.
யானைகள், மான்கள், காட்டு மாடுகள் கடந்து செல்லும் போது, மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சோதனை சாவடிகளில், நீலகிரி மலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, சோதனை செய்ய வேண்டும். குப்பைகளை போடும் நபர்களை கண்டறிந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
பொதுமக்கள் வனப்பகுதியை குப்பை கூடமாக மாற்றினால், வன விலங்குகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும், என்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வனத்துறையினர், கோத்தகிரி ஊட்டி ரோட்டில் உள்ள, மது பாட்டில்களையும், காலாவதியான மருந்துகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.