சூலூர்:டாஸ்மாக் வருமானத்தில் சரிபாதி பங்கை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சூலூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் சண்முகம் தலைமையில் நடந்தது.
அவிநாசியில் வரும், பிப். 6 ம்தேதி நடக்கும் முப்பெரும் விழாவில் கோவை மாவட்டத்தில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்பது என, முடிவு செய்யப்பட்டது. மாநில தலைவர் கூறுகையில், உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின், 100 வது பிறந்த நாள் விழா, சங்கத்தின், 50 ஆண்டு விழா, இலவச மின்சார கேட்டு போராடி உயிரிழந்த, 65 விவசாயிகளின் குடும்பத்தினருக்கும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக போராடியவர்களுக்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா அவிநாசியில் நடக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, 20 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து எதுவும் கூறவில்லை. கரும்பு உற்பத்தி செய்து கொடுப்பதால் தான் டாஸ்மாக் மூலம், பல ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகிறது.
அதனால், அந்த வருமானத்தில், கரும்பு விவசாயிகளுக்கும் சரிபாதி பங்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால், அரவை கூலியை மட்டும் பெற்றுக்கொண்டு, சர்க்கரை, சக்கை, மொலாஸஸ் ஆகியவற்றை விவசாயிகளிடமே திருப்பி அளிக்க வேண்டும், என்றார்.