புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறையால், நெல் அறுவடை பணி தாமதமாகிறது, என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி, நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது, பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. அறுவடை செய்ய போதிய கூலித் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை.
பெண் கூலித் தொழிலாளர்கள் பலரும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சேர்ந்து, பணிக்கு சென்று விடுவதால், அறுவடை பணி தாமதமாகி வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, பொன்னமராவதி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
தை மாதம் முதல் வாரத்தில், சிலர் அறுவடை செய்து விட்டனர். மழையை எதிர்பார்த்து தாமதமாக நடவு செய்தவர்கள் தற்போது தான் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமப்புறங்களில் பெரும் பாலானோர், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலைக்கு செல்வதால் அறுவடைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை.
வேலைக்கு வரும் ஒரு சிலரும், 400 முதல் 500 வரை சம்பளம் கேட்கின்றனர். கதிர் அடிக்கும் இயந்திரம் பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்துக்கு 2,500 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், குடும்பத்தில் உள்ளவர்களே, அறுவடை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.