பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை அன்னூர் மெயின் ரோட்டில் குப்பை தொட்டியோடு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளமடை ஊராட்சி, அன்னூர் மெயின் ரோட்டில் வெள்ளமடை ஆதிதிராவிடர் காலனி அருகே நேற்று ஒரு கி.மீ., தூரத்திற்கு புதிய தார் ரோடு அமைக்கப்பட்டது.
ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியை கூட அகற்றாமல் தார் ரோட்டை தேசிய நெடுஞ்சாலை துறையினர் அமைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிக்கு கீழ்ப்பகுதியில் குடிநீர் குழாய் செல்கிறது. அதில் ஏற்பட்ட கசிவால், அப்பகுதியில் ஆழமான குழி உருவாகியுள்ளது.
இக்குழி கடந்த ஒரு ஆண்டாக உள்ளது. அதில் பாதசாரிகள் யாரும் விழக்கூடாது என்பதால் அங்கு குப்பை தொட்டியை வைத்துள்ளனர். குப்பை தொட்டியை அகற்றிவிட்டு குடிநீர் குழாயை சரி செய்து தர வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகம், குடிநீர் திட்ட அதிகாரிகள் பலரை அணுகியும் பலன் இல்லை.
குடிநீர் குழாய் எந்த திட்டத்துக்கானது, யாருடையது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. குடிநீர் வினியோகத்தை நிறுத்தினால் மட்டுமே கசிவை சரி செய்ய முடியும் என்பதால், இப்பணியை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை.
குழாய் கசிவை சரி செய்து, குழியை மூடி கொடுத்தால், விடுபட்ட இடத்தில் தார் சாலையை அமைத்து தருவோம்' என்றனர்.