வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கேன்பெரா 'ஆஸ்திரேலிய நாட்டு கரன்சிகளில், இனி பிரிட்டன் மன்னர் உருவப்படம் இடம்பெறாது' என, அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்தது.
ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருந்துள்ளது. இன்று சுதந்திரம் பெற்றாலும், அந்நாடு பிரிட்டன் மன்னருக்கு ஆஸ்திரேலிய நாட்டின் தலைவர் என்ற அந்தஸ்தை வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய கரன்சியான டாலரில், பிரிட்டன் மன்னரின் உருவப்படத்தை அச்சிடுவதை அந்நாட்டு மத்திய வங்கி வழக்கமாக வைத்திருந்தது.
![]()
|
கடைசியாக, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறையும் வரை, அவரது உருவப்படத்தை ஆஸ்திரேலியாவின் 5 டாலர் மதிப்புள்ள நோட்டுகளில் அந்நாட்டு அரசு அச்சிட்டு வந்தது. அவரது மறைவுக்குப் பின், புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்லஸ் உருவப்படத்தை அச்சிடுவதற்காக ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில், 'ஆஸ்திரேலிய 5 டாலர் கரன்சிகளில் உள்நாட்டு முக்கியத்துவம் பெற்ற அம்சங்களை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
'எனவே, இதில் இனி பிரிட்டன் மன்னர் உருவப்படம் இடம்பெறாது. அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டுள்ளது. 'இந்த முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது' என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் 5 டாலர் கரன்சி நோட்டில் மட்டுமே பிரிட்டன் அரசரின் உருவம் இடம் பெற்று வந்தது. இப்போது அதுவும் நீக்கப்பட உள்ளது. ஆனால், நாணயங்களில் பிரிட்டன் மன்னர் உருவப்படம் தொடர்ந்து இடம் பெறும் என தெரிகிறது.