சென்னை:'இலங்கையில் 13வது சட்ட திருத்தத்தை எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறைப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, டில்லியில் நேற்று, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மனு அளித்தார்.
அப்போது, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர்.
மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
கடந்த 2015ல், இலங்கை பயணத்தின்போது பிரதமர் மோடி, '13வது சட்ட திருத்தத்தை விரைவாகவும், முழுதுமாகவும் அமல்படுத்தினால், இலங்கையில் தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம் உறுதி செய்யப்படும்' என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, 2020ல் 13வது சட்ட திருத்தத்தை விரைவில் அமல்படுத்துமாறு, இலங்கையின் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிரதமரின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் முன்னோடியான நீங்கள், இந்திய மீனவர்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளீர்கள்.
இலங்கையில் காவல் துறை மற்றும் வருவாய் அதிகாரங்கள் உட்பட, 13வது சட்ட திருத்தத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
கடந்த ஆண்டு, நான் இலங்கைக்கு சென்றபோதும், அந்நாட்டு தமிழக தலைவர்கள், மக்கள் உடனான உரையாடலின்போதும் 13வது சட்ட திருத்தத்தை முழுதுமாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர முடிந்தது.
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி, அனைத்து அதிகாரங்களையும் அந்நாட்டு மத்திய அரசுக்கு வழங்கியதுடன், மாகாணங்களுக்கான அதிகார பகிர்வு குறைக்கப்பட்டது. 1987 ஜூலை 29ல், இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக, 13வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இது, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை உள்ளடக்கிய, அன்றைய வட கிழக்கு மாகாணத்திற்கு, அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பதை நோக்கமாக கொண்டது. ஜெயவர்த்தனே - ராஜிவ் ஒப்பந்தம் என்ற இந்த உடன்படிக்கையின்படி, இலங்கை பார்லிமென்ட், 13வது சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது.
இது, இலங்கை முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கியது. இதனால், வட கிழக்கு மாகாணம் மட்டுமின்றி, இலங்கையின் மற்ற பகுதிகளில் உள்ள மாகாணங்களுக்கும் அதிகாரம் கிடைக்கும்.
பல ஆண்டுகளாக, அனைத்து பொருளாதார அதிகாரங்களையும் இலங்கை அரசு தக்க வைத்து கொண்டதால், தமிழர் அல்லாத அரசியல்வாதிகள் மட்டுமே அரசியல், நிர்வாகம், நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட அதிகாரங்களை அனுபவித்து வந்துள்ளனர்.
எனவே, தமிழ் மக்களின் 36 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு கட்ட, இனியும் தாமதிக்காமல், 13வது சட்ட திருத்தத்தை எந்த மாற்றமும் இல்லாமல் முழுதுமாக அமல்படுத்த, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் 13வது சட்ட திருத்தத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, டில்லியில் நேற்று மனு அளித்தார். உடன், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன்.